சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

பிரிவு துயர்

மண்ணுடன் உடல் உறவை முடிக்கும்
புண்ணுடலின் உயிரைக் காலன் குடிக்கும்
ஞாலம் தங்காத தற்காலிக வசிப்பு
காலனை நினைத்தாலே விட்டுப்போகுமே இரசிப்பு

பெற்றோரால் வையகத்தில் எதற்காக பிறப்பு
கற்பூர பொம்மையாய் உருவத்தின் இருப்பு
அழகான தேகம் அழுகியே போகும்
பழகிய வாழ்க்கையும் காணாமல் ஆகும்

சொத்தெங்கே சுகமெங்கே போகுமிடம் தானெங்கே
சுத்தமாய் வேடமதை களைக்கவரும் நாளிங்கே
வாழ்க்கையெனும் நாடகத்தை அரங்கேற்றிய மேடை
வீழ்த்திவிட்டு அழவைத்து ஏற்றிவிடும் பாடை
தாமரைமேல் நீர்த்துளி போல உள்ளநிலை
யாவருமே மாட்டிடுவார் இந்த விதியின்வலை

பிரிவு துயர் ஒருநாள் வந்துவிடும்
சரியும் உடலை தீயும் சுட்டுவிடும்
அழைப்பு மணியடித்தால் கதவைத் திறக்கவேண்டும்
பிளைப்பு நிரந்தரமில்லை விடைபெற வேண்டும்

ஜெயம்
26-06-2022