கவி 610
ஐயைந்து ஆண்டின்முன் புதைக்கப்பட்ட நல்விதை பெருவிருட்சமாய்
புலம்பெயர் தேசத்தில் நம்மவர்க்கானதொரு கலையகம்
உளம் வாழ்த்திச் சொல்வேன் பாமுகமென்றால் அதுதகும்
தேன் சொற்களைக்கொண்டு படைத்தலில் பேரூக்கம் காட்டும்
தான் கொண்ட எண்ணத்தை வண்ணமாய்த் தீட்டும்
எழுதாத கரங்களெல்லாம் எழுதி எழுதிக் குவித்தன
அழகான சிந்தனைகள் மனதில் மெல்லப் பதிந்தன
பேசாத உதடுகளெல்லாம் வாய்திறந்து மகிழ்ந்தன
தேசத்தின் மொழிமகனால் பல அற்புதங்கள் நிகழ்ந்தன
தன்னையுடைத்து என்னையுன்னைப் படைக்கும் தன்மை
மண்ணைவிட்டுப் பெயர்ந்தாலும் மண்ணைப்பார்த்தேனிங்கு உண்மை
சொல்லப்போனால் வந்தபோது மொழியறிவு பூச்சியம்
சொல்லவொரு விலாசமும் தந்தது பாமுகத்தின் இராச்சியம்
எத்தனையோ மொழியாக்கங்களை உருவாக்கிய உற்பத்திச்சாலை
அத்தனையும் சிறியோர்பெரியோரென நிறைத்திடும் நாளை
ஒன்று இரண்டென இருபத்தைந்தாவது ஆண்டில் காலடி பதித்தது
அன்றுபோல் இன்றும் பாமுகச் சூரியன் பிரகாசமாய் உதித்தது
புலம்பெயர் வாழ்வில் எமக்கொரு மொழிப் பொக்கிஷம்
வலம்வந்து கொண்டதால் வரங்கள் பல கைவசம்
ஒன்றிக்கொண்டது உயிரோடு நினைவுகளை முடியாது நீக்க
நன்றிசொல்ல வார்த்தைகளைத் தேடுகின்றேன் காணிக்கையாக்க
இனத்திற்கொரு வரப்பிரசாதமாய் கிடைத்தார் சாதனைத்தமிழன்
தனக்கென எண்ணாது வரும் தலைமுறையை எண்ணிடும் வளவன்
ஐயைந்து ஆண்டின்முன் புதைக்கப்பட்ட நல்விதை ஒன்று
ஐயமே இல்லை மண்ணைவென்று பெருவிருட்சமாய் நிற்குது இன்று
ஜெயம்
15-06-2022