வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 608

வாழ்வு மாயமே

மண்ணுடன் உடல் உறவை முடிக்கும்
உடலுடன் உயிர் உறவை முடிக்கும்
காலன் இரசிக்காத புவியின் வசிப்பு
கோலம் ஆடிய ஆட்டத்திற்கோர் முடிவு

இந்த வையகத்தில் எதற்காகப் பிறப்பு
கற்பூர பொம்மையாய் உருவத்தின் இருப்பு
பூமியே காலடிக்குள் கிடப்பதாக முன்னுரை
பூலோகத்தின் அடியில் புதைவதாய் முடிவுரை

மூச்சு ஒருநாளில் நின்றே போகும்
பேசிய வார்த்தைகள் அடங்கியே போகும்
அழகான தேகம் அழுகியே போகும்
அன்றாட வாழ்வு காணாமற் போகும்

சீவன் தங்காத தற்காலிக சீவியம்
சுவாசமும் தேய்ந்து காணாது அமாவாசையாகும்
அழைப்பு மணியடித்தால் கதவைத் திறக்கவேண்டும்
பூவை பறித்திடுவான் தோட்டக்காரன் உரிமையோடு

கொண்டு வருவதுமில்லை கொண்டு போவதுமில்லை
ஓடிவிட மூச்சும் எட்டுக்காலில் பயணம்
சொத்தெங்கே சுகமெங்கே போகுமிடம் தானெங்கே
மானிட வேடமதைக் களைக்கும்நாள் வருமிங்கே

வாழ்க்கையெனும் நாடகத்தை அரங்கேற்றிய மேடையதை
விடைபெற்று போய்விடவே முற்றுப்பெறும் பயனமங்கே
தாமரை மேலே நீர்த்துளி போல உள்ளநிலை
மாட்டாமல் எவருமே தப்பார் விதியின்வலை

ஜெயம்
25-05-2022