தீயில் எரியும் எம் தீவு
தீயினால் எரிந்து நாசமாகுமோவென நினைத்தது
நீதியின் நீரூற்றால் பாதியில் அணைந்தது
எப்படியாக இருந்த எம் தாய்த்திருநாடு
இப்படியாகிப் போனதென வருத்தமெல்லாம் மனதோடு
இயற்கை வளங்களாலே அமைக்கப்பட்டதோர் தோட்டம்
தயவின்றியே தற்சார்பில் வாழ்ந்த கூட்டம்
கொஞ்சிவிடும் மகிழ்வாலே வாழ்ந்தவர்தம் நெஞ்சம்
கெஞ்சிவிட உணவிற்கு வந்ததுமேன் பஞ்சம்
மொழி வேறு பேசியதால்
பிரிந்தவர்கள்
வழியொன்றைக் கண்டுகொண்டார் அனுபவித்து அறிந்தவர்கள்
சமத்துவமாய் வாழவென கற்றுக்கொண்டோமோர் பாடம்
சமயமிது சேர்ந்துழைத்தால் முன்னேறும் நம்நாடும்
பிழையான அரசியலால் யுத்தபூமி ஆனதன்று
கொள்ளைக்காரர் கைகளிலே பறியுந்தான் போனதின்று
சரியான ஆள்பார்த்து போட்டிருந்தால் தம்மோட்டை
பரிதவிக்கும் நிலையொன்று சூழ்ந்திராதே தாய்நாட்டை.
ஜெயம்
16-05-2022