சசிச
பிறந்த மனை
சீவியம் இங்கேதான் சுகத்தைப் பெற்றது
தாவியும் கூவியும் மகிழ்ச்சியைக் கற்றது
பூவினில் தேனதை வண்டாக உண்டது
நாவுரைத்த மொழியும் அழகைக் கண்டது
பிஞ்சுக்களாய் கொஞ்சி விளையாடிய மைதானம்
பஞ்சமில்லா உற்சாகங்களை நாட்களும் காணும்
வஞ்சகத்தை அறியாதே வளர்ந்துகொண்டேன் நானும்
நெஞ்சை விட்டகலாது நினைவுகளும் பேணும்
என் பெற்றோர்கள் வாழ்ந்திட்ட ஆலயம்
அன்பினை சுமந்து சுற்றிய குவலயம்
உண்மையை உயிராக்கி உலவிய உறவுகள்
ஒன்றாக வாழ்ந்ததால் நன்மையின் வரவுகள்
அறைகள் ஆறைக்கொண்ட அம்சமான கல்வீடு
குறைவில்லா கும்மாளத்தின் குருவிகளின் கூடு
முத்தத்தில் கனிகளோடு நிழல்தரும் மாமரம்
சித்தங்குளிர விளையாடும் குழந்தைகட்கு மாவரம்
வாழ்வின் பக்கங்கள் பளுவின்றி கழிந்தவிடம்
வாழ்வை வாவென்றே சொர்க்கத்திற்கே அழைத்துவிடும்
எனக்கென்று எனக்கென்று செய்தாலும் அதிகாரம்
தனக்கென்று உள்ளதை பகிர்ந்திடுவார் யாரும்
கூடப்பிறந்தவரே உண்மையான சொத்து என்று
கூடி வாழ்ந்தவரால் கண்டுகொண்டேன் அன்று
பிறந்த மனைபற்றி கூறியதெல்லாம் இயற்கை
சிறப்புதனை செப்புகின்றேன் சிறிதுமில்லை செயற்கை
பிடித்ததொரு வாழ்வொன்று இன்றுந்தான் உண்டு
பிடிப்பில்லா காரியத்தை சேர்த்துந்தான் கொண்டு
இயன்றவரை முயற்சிக்கின்றேன் அன்றையதை அருகமைக்க
பயனடைந்து மறுபடியும் முன்னர்போல வடிவமைக்க
ஜெயம்
19-11-2023