வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 662

கறுப்பு யூலை 40 வருடம்

மனிதமறியா தேசத்தில் பிறந்தது குற்றம்
குனியக்குனிய குட்டிக்கொண்டே இருக்கின்றது சுற்றம்
வழியின்றி தவிக்கின்றது பாவப்பட்ட இனமொன்று
அழிப்பதற்காகவே கூடவே இன்னோர் இனமொன்று

எத்தனை ஆண்டுகள் போனாலும் மறக்காதது
சிந்தைக்குள் நெருப்பாக எரியும் உறங்காதது
அன்பைப் பற்றி தெரியாத கூட்டம்
அன்றுதொட்டு இன்றுவரை அரக்கராய் ஆட்டம்

இரக்கத்தை இரந்துமே கேட்பவர் நாம்
இரத்தம் சிந்தவென தோன்றியவர் நாம்
காணாமல் போகவென பிறவியெடுத்தவர் நாம்
வீணாக்கி உடமைகளை அகதியாகுவதும் நாம்

தமிழராய் இருப்பது மண்ணிலே பாவம்
நிமிரவிடாதே கிடைத்தது நீங்காத சாபம்
மண்ணென்னையும் நீருமாக நாட்டுக்குள்ளே ஈரினங்கள்
ஒன்றுபடா இந்நிலையில் தோன்றிடுமோ சமாதானங்கள்

ஜெயம்
20-07-2023