வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 657

கவிஞர்களுக்கு வாழ்த்துகள்

கொஞ்சுகின்ற தமிழெடுத்து பாக்களினை வடிப்பார்
கேட்டுவிடும் உள்ளங்களில் இடமொன்றைப் பிடிப்பார்
பஞ்சமில்லை வார்த்தைகட்கு வரிகளைக் கட்டிவிடும்
படையெடுக்கும் கற்பனைகள் சொற்களாகக் கொட்டிவிடும்
அஞ்சாது துணிந்தே முழக்கங்களை இடுவார்
ஆழமான கருத்துக்களால் சிந்தையதை தொடுவார்
இஞ்சி இஞ்சியாக இதயங்களைக் கவர்ந்து
இரசிகர்க்கு அளிப்பாரே எழுத்தாலே விருந்து

வண்ணமிகு தாய்மொழிக்கு சேர்ப்பாரே எழிலை
வளமான சொல்லெடுத்து செய்வாரே
தொழிலை
எண்ணத்திலும் செயலிலும் கவிஞராக வாழும்
உறக்கத்திலே கனவினிலும் இந்நிலையே நீளும்
உண்டுவிடும் உணவதனை தள்ளியுந்தான் வைத்து
உருவாக்கும் கருவதனை
ஆரோக்கியமாய் பெற்று
பண்புடனே பாட்டெழுதி பாடிடுவார் பாவலர்கள்
பொங்குதமிழ் தேசத்திற்கு என்றுமவர் காவலர்கள்.

ஜெயம்
12 – 06- 2023