சந்தம் சிந்தும் கவிதை

செ.தெய்வேந்திரமூர்த்தி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் – 219
தலைப்பு:-
ஆற்றல்
“””””””
ஆற்றல் வேண்டும் அவனியில் வாழ
ஆசை கொள்வாய் அதனையும் தேட
போற்றும் கல்விப் புகழினைக் காணப்
பொய்யா துளைப்பாய் பொலிந்திடும் ஆற்றல்
ஏற்றம் அடைய தெஃகெனும் மேனி
என்றும் துணையாம் ஏற்றுநீ வெல்வாய்
சீற்றம் வேண்டாம் சிதைந்திடும் சிந்தை
செம்மை உள்ளம் செருக்கினை ஓட்டும்!

அன்னை தந்தை அவர்தரும் ஆசி
ஆர்வம் கூட்டி அறிவினைத் தேக்கும்
பின்னம் காட்டா துறவுகொள் நட்பு
பின்நாள் வந்தே உதவிடும் பாராய்
மன்னும் துன்பம் மகத்துவப் பாடம்
மண்ணில் காண்பார் மனத்தெழும் ஆற்றல்
அன்பில் மூழ்கா அகத்துறை எண்ணம்
என்றும் நன்றாய் இலங்குமா சொல்வீர்
உள்ளத் தாற்றல் உயரிய உண்மை
ஓர்மம் கொண்ட உழைப்பினில் காட்டு
பள்ளம் பாய்ந்து பரவிடும் நீரின்
பாயும் ஆற்றல் பலமுடை நோக்கே
கள்ளம் வேண்டாக் கடிதுறு ஞாலம்
காலங் பார்க்காக் கருத்தினை நல்கும்
அள்ளக் குன்றா அறிவுடை மக்கள்
ஆற்றல் தானே அனைத்தையும் ஆளும்!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
15/04/2023.