சந்தம் சிந்தும் கவிதை

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா!
திருநங்கை
“””””””””””””
ஆண்டவனின் படைப்பினிலே அறியொணாத பக்கமென
அகத்தினிலே எழுகேள்வி அலையெனவே
தோன்றுதிங்கே!
வேண்டுவார்க் கீயுமிறை வேதனைகள் தந்ததேனோ
வெந்தழலாய் நொந்துமனம் வெட்கிடவும்
செய்ததேனோ?
தாண்டிடுவாய் தகாதவற்றை தங்கையுனை வேண்டுகின்றேன்
தன்னிலையை ஏற்றவளாய் தகைமையுடன்
நீயெழுவாய்
மாண்டிடாத மங்கையென மனத்துறுதி கொள்மகளே
மங்கிடாத செல்வமுனை மதியாரை
மதிக்காதே!

குறையில்லா மனிதருண்டா கூறிடுவாய் குவலயத்தில்
குன்றாதே சகோதரியே குறையிலையுன்
உளவியலில்
மறைபொருளின் மகத்துவத்தை மண்ணிலிங்கே
யாரறிவார்
மருகாதே மனத்தினுள்ளே மண்ணிதற்குப்
பயனளிப்பாய்
இறையவனின் உட்கருத்தாய் இன்சொற்கள்
பேசிடுவாய்
இயக்கிடுவாய் இவ்வுலகை ஈசனவன் பேராலே
சிறைசெல்ல நேரிடினும் செம்மைவழி விலகாதே
சீராளர் பட்டியலில் சிறக்காதோ உன்பதிவு.

திருவில்லாக் கயவர்களால் தீவினைகள் சூழ்கையிலே
திருநங்கை நீயுமிங்கே திருப்பத்தை ஏற்படுத்து
கருவினிலே தோன்றாமல் கடந்துவரும் காலமதில்
கலங்கிடவே வந்தநிலை கண்ணேயுன்
குற்றமல்ல
பெருகுகின்ற மறச்செயலால் பேதலிக்க வேண்டாமே
பெற்றோரும் உடனிருக்காப் பெருந்துன்பம்
வேறுளதோ
வருந்தாமல் நீயெனக்கு வரமொன்று தாராயோ
வைகையெனப் பொங்கிவந்து வளங்கொளிக்க
வாழ்வளிப்பாய்!

கல்வியினைத் துணைக்கொள்வாய் கவலையின்றி
வாழ்ந்திடுவாய்
கறையில்லை உன்பிறப்பு கருத்திலெடு
கண்மணியே
வல்லவளாய் நிமிர்ந்திங்கே வழிகாட்டு!
திருநங்காய்
வாழ்வினையே சரித்திரமாய் வகுத்துவிடு
உன்னோடு
செல்வழியைச் செம்மையுடன் சிந்தித்து நகர்த்திவிடு
சேவைகளில் உன்பெயரைச் செதுக்கிடவே
முனைந்துவிடு
வல்லவளே வாழ்த்துகின்றேன் வருந்தட்டும்
உனையிழந்தோர்
வஞ்சகரால் இடரேதும் வாராது நீவாழ்க!

திருமதி
செ. தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை .