வியாழன் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி.

மீட்டு வைக்க யார் வருவார்?

கடலலையடித்து திரையது பொங்க
மடல் கழன்று ,தாள் மண்ணில் விழவும்
திடலழித்து தோட்டமாக்கி
படல் போட்டு பாவற்கொடியும் வைத்து

களனி கங்கை வற்றி நிற்க
காசினியில் வெயில் உச்சம் கொள்ள
பானையில் சோறு இன்றியகப்பை தாளமிட
படரும் துன்பத்தில் மலையகம் வாடி நிற்க

நிலையும் மாறிப் போய் விடாதா
களையும் எடுக்க முடியாத நிலையோ
தேயிலைக்கன்றுகள் கருகி நின்றால்
தேசம் மகிழ வாழ்வதெங்கே

பாவம் பார்த்து தருவார் யாரோ
காலம் பார்த்து மீட்பார் யாரோ
வாழும் காலம் சோரும் நிலையோ
தேடும் நேரம் இனி எப்பவருமோ

மழை வீழ்ச்சியோ மண்ணில் இல்லை
மாணிலமும் இங்கே செழிக்கவில்லை
மீட்சியென்பது எமக்கும் இல்லை
மீட்டு வைக்க யார் வருவாரோ..!?

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.