சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

முள்ளிவாய்க்கால்
——
முடிந்தது போர் முள்ளிவாய்க்காலோடு
கொடிய சிங்கள படையின்
கோர தாண்டவம்
அழிந்தது தமிழ்இனம்
ஆயிரம் ஆயிரம்
எழுத்தில் எண்ணிக்கை
இன்னும் அறியாமல்
வெள்ளை கொடியோடு
வெளிவந்தோர் சூடுபட்டும்
இல்லை இனி வழி என்றோ
எல்லோரும் சரணடைந்தார்
குப்பியை அறுத்தெறிந்து
கொடியோர் கையில் வந்து
எப்பொழுதும் தேடுகிறார்
எங்கே போராளர் என்று.
நிர்வாண கோலத்தில்
நிறைக்கு வைத்து முதுகில்
சுட்டுக் கொன்ற படம்
சுற்றியதே வலைத்தளத்தில்
வெற்றுடலாய் துண்டும் இன்றி
வெறியர் கையில் கசக்குண்டு
எத்தனை பெண் போராளர்
இறுதியிலே சடலங்களாய்
சாக்கு சாக்காய் வரி என்றும்
தந்தவர்கள் நிதி என்றும்
சேர்த்த பணம் பவுன் எல்லாம்
திருடியவர் யார் எவரோ?
எல்லாமே போனதுவே
எதிரி கை ஓங்கியதே
இங்கங்கு எல்லாமே
எழுந்தது விகாரைகளே
தமிழ் ஈழ தாகத்தில்
இழந்தவைகள் ஏராளம்
ஒரு ஊரும் பாக்கியின்றி
உள் எங்கும் ஆளும் இனம்?
யார் தவறோ ஏன் இதுவோ
முள்ளி வாய்க்காலோடு
முடிந்தது எல்லாமே
-சிவரஞ்சனி கலைச்செல்வன்