வியாழன் கவி 1678
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி!
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் தாண்டி ஈராயிரமாய்
நாட்களை எண்ணியே கடக்க
எத்தனை கோடி வலி இங்கே!
இருப்புக்களை உறுதிப்படுத்தாது
உணர்வுகளைப் பொருட்படுத்தாது
உயிர் வலி உணராது இன்னும்
உறவுகளை அலைக்கழிக்க!
இன்னும் எத்தனை நாட்கள்
எத்தனை யுகங்கள் வேண்டுமோ
தேடியவரும் இல்லாது போக
தேடப்பட்டவரும் தொடர்கதையாக!
இதுவா வாழ்வியல் நீதி நெறி
இதுவா மானிட தர்மம்
எய்தவர் இருக்க அம்பை நோவதா
ஈட்டிகளாய் வலி தேக்கம் காண்பதா!
நீர் வற்றிய விழிகளும்
குருதி வழிந்தே உலர்ந்த இதயமும்
காய்த்துப்போன பாதங்களும்
விதியானதோ எம் உறவுகளுக்கு!
இன்றே செய் அதை நன்றே செய்
இன்னும் தண்டிப்புகள் வேண்டாம்
ஆதரவாய் எம் கரமும் நீளும்
உறவுகளுக்காய் உணர்வோடு
நீதி கேட்போம்!!
நன்றி