வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1644!
பூமிப்பந்தில் நானும்!

பூமிப்பந்தில் நானும் ஒரு சுமை தானா
சுகம் காணாத் தேடல் வீணா
சுமை தாங்கி என்பது கண்கூடா
சுய விமர்சனம் காணல் முறை தானா!

மண்ணுக்குப் பாரமான வெற்றுடலா
மரணத்தின் கைதியான சீடனா
மாற்றங்கள் ஏற்றிடக் காத்திருப்பா
மாறாக் களத்திடைச் சுடுகுழலா!

பல்விதமாய்ச் சுழலுதிங்கே மனமது
பண்பிழந்து தவிப்பது உயிர்க்கூடு
கூடி வரும் ஒரு நாளும் அருகிலா
குவலயமே சொல்கிவிடு நான் பாரமா

காரணமும் உண்டே படைப்பினுக்கு
கருணை மனம் கொண்டால் மாந்தர்
பின்னும் ஏனிந்த துயரமெல்லாம்
துணிந்து நின்றால் ஓடாதோ பின்னால்!

தாங்கும் பூமியதை நாம் தாங்க வேண்டும்
தங்கிய கருவறையை சீர்தூக்க வேண்டும்
எங்குமிங்கே ஓருலகைக் காண
ஒன்றுபடல் இன் நாளில் போதும்!
சிவதர்சனி இராகவன்
14/7/2022