வியாழன் கவிதை நேரம்!
கவி இலக்கம்-1646
மீளெழுங்காலம்!
அகத்தைத் தொலைத்தவராய்
அன்று தேசம் விட்டோடி
நாடோடிகளாய் இன்னும் இன்னும்
மீளெழுகைக்காய் காத்திருப்பு!!
எல்லைகள் கடந்து இழந்தது பாதி
எஞ்சியிருப்பதைக் காக்க மீதி
எச்சங்களைப் பதியமிட போராடி
மீழெழுங்காலம் வேர்பதிக்க ஓடோடி
கிடைத்ததொரு நிலமதில் வாழ்வு
கிளர்ந்தெழும் நொடிகளின் தேர்வு
ஏக்கங்கள் விரட்டியொரு தீர்வு
எமக்கான விடிவாய்த்தேடியபொழுது
பொறுத்தது போதும் என்றே குரல்
பொங்கி வந்து செவி வீழும் கணம்
வானோடி வழி நெடுக நீராடி
எழுந்திடுவோம் நம் மொழி சூடி!!
சிவதர்சனி இராகவன்
22/6/2022