சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு!
இன்று சர்வதேசத் தாய்மொழிநாளை முன்னிட்டு என் விருப்பத்தலைப்பு!
தாய்மொழி தமிழே வாழி!
எண்சீர் விருத்தம்: காய் காய் மா தேமா/ காய் காய் மா தேமா
முத்தமிழே முழுமூச்சாய் முகர்ந்து கொண்டு
முனைப்புடனே முழுவுலகும் அறியச் செய்ய
உத்தமர்தான் நடாமோகன் ஊக்கம் தந்தார்
உருவாக்கும் நம்கவிதை உயர்ந்தே நிற்கப்
பத்திரமாய்ப் பருகியேதான் பகுத்தே நிற்பார்
பவைஅண்ணா பைந்தமிழின் சிறப்புச் சொல்வார்
வித்தகத்தை வீணடிக்கா வகையாய் என்றும்
வீரியமாய் வளர்த்திட்டே வாழ்வோம் நாமே!
முத்தமிழே முதல்மொழியே வருவாய் உன்றன்
மன்றத்தில் நிறைந்திடுவாய் மனங்கள் சேர்ந்தோம்
இத்தரையில் உன்னைத்தான் வணங்கி நாங்கள்
இங்கிதமாய் வந்தனமும் சொல்லி ஏத்தி
நித்திலமாய் விளங்கிடவே செய்வோம் என்றும்
நிம்மதியே உன்னாலே காண வேண்டும்
வித்தகியே வணங்குகின்றேன் வீரம் பெற்று
வீச்சுடனே உயர்ந்திடுவாய் வாழ்க நீயே!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் மிகுந்த நன்றி. அனைத்துக் கவிப்படைப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.