இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
சுதந்திரக் காற்று சுகமே!
(மரபுக்கவி – குறள்தாழிசை அந்தாதி)
கஞ்சியைக் குடித்துக் கறியொடு குழைத்த
குஞ்சுமீன் பொரியல் கூட உண்டேன்
உண்டது மட்டுமா உறங்கவும் கிடைத்ததே
உன்னத தேசம் உணர்விலே கலந்தது
கலந்தஎன் தேசம் கலைந்து போனதே
வலம்வரும் நாளும் வாடியே நிற்பேன்
நிற்பது நடப்பது நினைவுகள் சுமந்தே
அற்புத தேசம் அகத்தில் நிறையுமே
நிறைந்த வாழ்வு நிலமது தந்தது
மறைந்து போகுமா மண்ணின் வாசம்
வாசம் வீசும் வசந்தக் காற்று
நேசம் கொண்ட நெஞ்சம் தேடும்
தேடிய தேசம் தென்பட வில்லையே
பாடுகள் பட்டோம் பாவிகள் ஆனோம்
ஆனதில் வந்தோம் அகதியாய் இங்கே
மானம் ஒன்றே மகுடம் தருமே
தருமே இன்பம் தாயகம் தானே
வருமா சுதந்திரம் வசந்தம் வீசுமா
வீசும் காற்று வாசல் வரவே
பேசும் நாங்கள் புசிப்போம் கஞ்சி!
திரு.சக்தி சக்திதாசன் அவர்களே!
மிகுந்த நன்றி!
திருமதி. வஜிதா முகமட் அவர்களே மிகுந்த நன்றி!
இருவரும் ஆற்றுகின்ற பணி போற்றுதற்குரியது. பாராட்டுகள்!
திரு.நடா மோகன் அவர்களே! உங்களுக்கும் மிகுந்த நன்றி கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!