அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை!
வாரிஎழும் புழுதிமண் வாசம்!
செம்மண் நிலத்தில் செழித்த விளைநிலம்
எம்மாத்திர அழகு எந்தன் உணர்வில் உறைந்து கிடக்குது
கிராமத்து வாழ்வில் கிடைத்த சுகம்
இராதே இந்தப் புலம்பெயர் வாழ்விலே!
விளையாடி மகிழ்ந்த வேப்பமர நிழல்
களையாற இருந்த அந்த அழகான ஆலமரம்
பச்சைப்பசேலெனப் பயிர்களின் காட்சி
இச்சைகொள்ள வைக்கும் இலந்தைமரம்
வாய்க்கால் வரம்பினில் நடந்த நடை
பாய்போட்டுப்படுத்த வீட்டின் அறை
புள்ளினங்கள் இசைக்கும் பூபாளம்
அள்ளிக் குளிக்க இருந்த கிணற்றடி
பள்ளிக்கூட வாழ்க்கை பாடித்திரிந்த காலம்
கோலாட்டம் கும்மி நடனம்
கோவில் விழாக்கள்
மண்குடிசை ஆனாலும் மனது நிறைந்த
பண்பாட்டு விழுமியமும் பாசமிகு உறவுகளும்
கூடிக் குடித்த கூழின் சுவையும்
நினைத்தாலே இனிக்குது !
தேடிக்கண்டுகொள்ள தேசம் இல்லையே
ஆடிப்பாடி விளையாடிய அயலவரும் இல்லையே
ஆறுபோல் பெருக்கெடுத்து
ஆழ்மனதில் ஊறுதே
கூறுபோட்டுப் பகிர்ந்துண்ட கூட்டுக்குடும்பம்
வேறுவேறாய் வெளிநாட்டில்
நீறுபூத்த நெருப்பாய் நினைவலைகள்!
வளங்கொழிக்கும் குரும்பையூரில் விழுந்த மழைத்துளியில்
கிளம்பிய புழுதிவாசம்
கிடைக்குமா புலம்பெயர் வாழ்வில்?
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள்!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.