வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்!
கவித்தலைப்பு
ஆடியே பெருக்கெடுத்து ஆடியும் வா ஓடியும் வா!
(எழுசீர் விருத்தம்) சீர் வரையறை: காய் காய் காய் காய்/ காய் காய் தேமா
ஆடிவந்தால் அவனியில் ஆனந்தம் காண்போமே
அனைவருக்கும் குதூகலமும் உண்டு
தேடிவிதை என்றார்கள் தேறுமேதான் விளைச்சலுமே
தெம்மாங்கும் பாடிவரும் தென்றல்
கூடிக்கூழ் குடித்திடவும் குடும்பமாய் இணைந்திடுவர்
குற்றங்கள் களைந்திட்டே கூடிப்
பாடிவரும் பாட்டினிலே பரவசமும் காண்பாரே
பக்தியுடன் தொழுதிடுவர் பாரில்!

உக்கிரமாய் உழவும்தான் உவகையன்றோ ஆடியேநீ
ஊரினிலே பெருக்கெடுத்து வந்தால்
அக்களிப்போம் ஆர்ப்பரிப்போம் ஆனந்தம் காண்போமே
ஆடியிலே பூரமென்ற அந்நாள்
பக்தியிலே மூழ்கியேதான் பராசக்தி வாசலிலே
பஜனைகளும் பாடிடுவோம் பாரில்
திக்கெட்டும் துன்பங்கள் தீர்ந்திடவும் கூடுமன்றோ
தீமைகளும் தொலைந்திடவும் நன்றே!
களிப்புடனே கோடையிலே களியாட்டம் கண்டிடுவோம்
காரிகைகள் அலங்காரம் பூண்டு
குளித்திடவும் உகந்ததுவே குற்றாலத் தண்ணீரும்
குதூகலமாய் அனுபவிக்க ஆகும்
தெளிவுடனே மக்களுமே தெய்வத்தைக் தொழுதுகொண்டு
தேசமெங்கும் அமைதிகாண வாவா
இளிவுநிலை இல்லாதே இவ்வையகம் உயர்ந்திடவே
இன்பமுடன் பெருக்கெடுத்து வாநீ!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றி!
திரு.திருமதி. நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
அனைத்துக் கவிப்படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!