சந்தம் சிந்தும் சந்திப்பு
“பாரதிதாசன்”
பிறந்தாய் புதுச்சேரியில்
சிறந்தது தமிழென்பேன்
பறந்தன பொறியாய்
விரிந்தன புரட்சிக்கனவுகள்
வித்தெனத் தமிழகத்தில்
முத்தென உதித்தாய்
ரத்தினச் சுப்புரத்தினமென
சொத்தெனத் தமிழன்னைக்கே
மாகவியாய் திகழ்ந்திட்ட
மாபெரும் கவிஞனாம்
மகாகவி பாரதியாரின்
மாண்புடை சீடனானாய்
பாட்டுடைத் தலைவன்
புகழினைத் தாங்கிட
பாரதிதாசனாக மலர்ந்தாய்
பாவேந்தனென சிறந்திட்டாய்
சமத்துவம் வேண்டியே
சமைத்திட்ட பாக்கள்
சரித்திரப் புகழுடை
சிறப்புடன் திகழ்கின்றன
பெண்ணடிமை ஒழித்திட
பெருங்கவிதை தந்தாய்
பாடல்கள் கூட்டியெமக்கு
பல்லறிவினை ஊட்டினாயே
மடமைகளனைத்தும் உலகிடை
மறைந்திட கூட்டினாய்
மணிமணியாய்க் கவிதைகள்
மறைந்திடுமோ நின்புகழ் ?
தமிழினை அமுதென்றாய்
தமிழேயுன் தேனென்றாய்
தமிழுந்தன் தாயென்றாய்
தமிழ்க்கவிதை சேயென்றாய்
அய்யாவுன் பிறந்தநாளில்
அன்னைத்தமிழ் பூக்களினால்
அன்புடனே அர்ச்சிக்கிறேன்
ஆசிவழங்கி அருளிடுவாய்
வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்