சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

செல்லச் செல்லப் பயணத்தில்
சொல்லப் பல அனுபவங்கள்
தேடிவந்த நோக்கத்தை அடைய
நாடித் தானிந்த ஓட்டமென்பேன்

நேற்றொரு மேடையில் முடிந்த
நாடகப் பாத்திரம் ஒன்று
இன்றொரு வேடம் தாங்கி
இங்கொரு அனுபவம் தேடி

நானெனும் உருவம் தன்னில்
தானென்னும் ஆணவம் கொண்டு
வீணென்னும் செயலில் இறங்கி
ஏனின்னும் மாயையில் மூழ்கி

செய்திடும் வினைகளின் விளைவு
சேர்த்திடும் கர்மங்கள் சூழ்ந்திட
பிறந்திடும் ஆன்மா மறுபடி
தெரிந்திடும் ஆன்மீக அறிவியல்

வாழ்வொன்றும் நிலையல்ல
வருடம் முழுவதும் வசந்தமில்லை
புரிந்துகொள்ள எடுத்ததோ
புவியிலே வருடங்கள் பலவோடி

சக்தி சக்திதாசன்