என்னைப் பற்றிய
எனது குறிப்புகளை
எங்கோ தொலைத்து விட்டேன்
எழுத்து எனும் வெளிச்சத்திடு
என்னைத் தேடிக் கொண்டே !
முன்னை ஒரு பிறப்பில்
என்னைக் கண்டதாக
சொன்ன ஒருவரின்
சொற்களுக்குள் நானெங்கோ
சிக்கியிருக்கிறேனோ ?
விண்ணை நோக்கினேன்
விசாலமாய் ஒரு உருவம்
விளக்கியது வாழ்க்கைக் கோலத்தை
வித்தியாசமானவனல்ல நீ !
விசித்திரமான ஒரு அறிவுக்குருடனே !
நின்னைப் புரிந்திடாமல்
நிந்தன் பாத்திரத்தைக் அறிந்திடாமல்
வேடம் கலைந்து விட்டால்
ஏதுமற்ற ஓர் ஆன்மா எனப் புரியாத
ஞானச்சூனியத்துள் புதைந்தவனே நீ !
சொன்ன விளக்கங்களால்
என்னுள் புரளுகின்ற
எண்ண அலைகளினுள்
மிதக்கும் படகாக தெரிவதொன்றே
மீதமிங்கு ஆன்மாவென்பதுவே !
எழுத்துகள் முடிவதில்லை
எண்ணங்கள் ஓய்வதில்லை
எந்தன் தேடல்கள் மாய்வதில்லை
உணர்ந்ததை எழுத்தாக்கித் தாளில்
உண்மையை வடித்திடுவேன்
சக்தி சக்திதாசன்