சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

காலையிலே மலர்ந்தவொரு
கவிதையெந்தன் நெஞ்சிலே
கதிரவன் ஒளியதனில்
கதைபேசும் பொழுதிதுவே !

வந்தவழி தெரிந்திருந்தும்
போகுமிடம் புரியவில்லை
இருப்பதிங்கு கொஞ்சக்காலம்
இதயத்திலே சோகமில்லை

காட்சிகள் பலவுண்டு
சாட்சியாக ஞாபகங்கள்
மீட்சிதேடிப் பயணங்கள்
நீட்சி வாழும்காலம்தானே

நிஜங்கள் நிழலாகுவதும்
நிழல்கள் நிஜங்களாவதும்
நடப்பதுண்டு சமயங்களில்
நினைவிலாடும் நர்த்தனங்கள்

ஆனந்தமாய் வாழ்ந்துவிட்டால்
அன்பாக இருந்துவிட்டால்
அனைவருமே நண்பர்களே !
அனைத்துமே அனுகூலங்களே !

மேகங்கள் மறைப்பதினால்
ஆதவன் மடிவதில்லை
நேர்வழியெம் பாதையெனில்
வாழ்வினில் தோல்வியில்லை

சக்தி சக்திதாசன்