சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

ஞாலத்தின் மீதொரு
பவனி வந்து – அதன்
கோலத்தை பார்த்ததொரு
வியப்பன்றோ !
காலத்தின் சூட்சுமங்கள்
புரியாமல் மூலத்தைத்
தொலைத்து விட்ட வேகங்கள்

சூழலின் மாற்றங்கள்
புரியவில்லை – ஏனோ
சுழலுகின்ற காரணமும்
தெரியவில்லை
பகடைக் காய்களாக
நாமே அவனியில்
பவனி வருகின்றோம்
பெருமையுடன்

சிந்துகின்ற மணித்துளிகள்
எல்லாம் – கூறும்
சிந்தை மிகு விளக்கமொன்று
காண்பீர் உலகினிலே
முந்தி விழுகின்ற
துளிகளும் கூட
முடிகின்ற இடம்
அதே தரைதானே !

எண்ணி, எண்ணிப்
பார்க்கின்ற வேளையிலே – என்
எண்ணங்களில் பூத்து
நிற்கும் நினைவு ஒன்று
என்ன, என்ன செய்தாலும்
அது எல்லாம்
எனதென்ற எண்ணம்
வெறும் பொய்யே !

உள்ளமெங்கும் பூத்து
மணம் வீசும் – அந்த
உண்மையான உணர்வு
அன்பு ஒன்றே
உணர்ந்து கொள்ளும் போது
நெஞ்சில் அழியாமலே
உதிக்கும் அழியா
உண்மையான தெளிவு

சக்தி சக்திதாசன்