சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

கதையொன்று சொல்லவா ?
கவிதையொன்று புனையவா ?
காணாத பல காட்சி புவியில்
கண்டு வந்த காரணத்தால் , , , , 

நிஜமென்று ஒன்றுமில்லை
நிழலென்று பிறந்த பின்னால்
முடிவென்று ஒன்றுமில்லை
முற்றுப்புள்ளி ஆனதினால்

விதையாகி விழுந்திருந்தால்
விருட்சமாய் எழுந்திடலாம்
கனியாக திரண்டிருந்தால்
பசிதீர்க்கும் வழியாகலாம்

கருமுகிலாய் குவிந்திருந்தால்
கனமழையாய்ப் பொழிந்திடலாம்
காற்றாகத் தவழ்ந்திருந்தால்
சில்லென்னும் உணர்வாகலாம்

சிப்பிக்குள் துளிர்த்திருந்தால்
முத்தாகி மிளிர்ந்திடலாம்
சேற்றினுள் பூத்திருந்தால்
செந்தாமரையாய் மலர்ந்திடலாம்

நினைவெல்லாம் கனவாகியே
கனவெல்லாம் கதையாகியோர்
விலையில்லா விவேகத்தை
விளைவாகக் கொண்டதிங்கே

சொற்களினுள் புதைந்திருக்கும்
சொற்செல்வச் செழிப்புக்கொண்டு
சொல்லுகின்ற கவிதைகளினுள்
சொற்சிலம்பம் ஆடுகின்றேன்

பாழுமிந்த உலகினிலே
பாவங்களின் மத்தியிலே
மனிதனாய்ப் பிறந்ததினால்
மனதிலெழும் கவிதைகளே !

புவியிந்தப்பெரும் ஆழியில்
புலர்ந்ததிந்த வாழ்க்கைப்படகு
புதிரானப் பயணமிது
பார்ப்பதெல்லாம் நாடகமே !

சக்தி சக்திதாசன்