என் தேடலில் தெறிக்கும்
துளிகளின் துவக்கம்
என் பாடலில் அடக்கம்
இக்கவிதையின் ஆக்கம்
தாவிடும் ஆசைகள் ஓடிடும்
வழியின் ஓரத்தில் கண்டிடும்
சிற்சிறு சிந்தனைத் துளிகள்
கற்பிக்கும் பேருடை கருத்தினை
தத்துவம் என்றே ஒரு காலம்
தந்தை கூறிய அறிவுரைகளை
ஒதுக்கி ஓடிய வாலிபக்கோலம்
ஓடி முடித்தது தனது எல்லையை
எப்பொருள் இன்று யார்வாய் கேட்பினும்
அப்பொருள் தனிலே மெய்ப்பொருள் தனை
கண்டிட வைத்திட்ட காலத்தின் கோலம்
காணவைத்ததோ ஒரு உண்மைத் தாண்டவம்
நானென்று நிமிர்ந்த ஆணவக்கோலம்
நாணிட வைத்திடும் எனை நான் பார்க்கையில்
நானென்று இங்கே எதுவுமில்லை என்பதே
நானின்று வாழ்வில் கண்டிட்ட உண்மை
துரும்பென்று என்றோ எண்ணியதொன்றே
துருப்புச் சீட்டாய் வாழ்வினில் மாறிய விந்தை
ஞானம் என்றொரு ஆழியின் கரையில்
சிந்தையில் இருப்பதோ ஒருதுளி நீரே !
ஓயாத தேடல் ! ஓடிடும் காலம் ! மீத வாழ்வு
ஓங்கார கீதம் உள்ளத்தில் ஒலிப்பது என்றும்
ஓயாமல் சொல்வது தேடலின் அவசியம்
ஒளிந்திடும் உண்மையை துலக்கிட வேகம்