மூடிவிட்ட புத்தகத்துள்
முடங்கிவிட்ட
அத்தியாயமாய் ;
அடங்கிவிட்ட வாழ்வின்
ஆரவாரங்கள்
அமைதியாகின ;
இங்கிலாந்தின் மகாராணி
இரண்டாம் எலிசபெத்தின்
மீளாத உறக்கமிது ;
எறும்புகளின் ஊர்வலம்போல்
ஊர்ந்து செல்லும்
மக்கள் அணிகள் ;
இரவுபகல் மாற்றமின்றி
முடியாண்ட ராணியை
தரிசிக்கும் ஆவலில் ;
இருபத்தோடு ஓராறு
இளமையின் உச்சத்தில்
முடிசூடிக் கொண்டவர் ;
தொண்ணூரோடு ஓராறு
அகவையில் விழிகளை
ஆழமாய் மூடிக்கொண்டார் ;
அரியணையில் அமர்ந்து
அரசாண்டவர் அல்ல
அரசி எலிசபெத் !
மக்கள் மனங்களில்
குடியிருந்து நாட்டின்
முதுகெலும்பாயிருந்தார் ;
ராணியாக மட்டுமல்ல
தாயாகப் பாசத்துடன்
தாரமாகக் காதலுடன் ;
ஒன்றல்ல , இரண்டல்ல
ஒன்றான மணவாழ்வில்
ஒரெழுபத்தி மூன்றாண்டுகள் ;
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
கணப்பொழுதும் தவறாமல்
கண்மூடிய தலைவியிவர் ;
விமர்சனங்கள், முறைப்பாடுகள்
விலகியே வாழ்ந்திருந்து
விழிகளை மூடினார் ;
கணவனே தன்றன்
உரமிக்க அடித்தளமென்றே
உரக்கவே உரைத்திட்டார் ;
கண்ணிறைந்த கணவன்
காற்றாகி ஒரு வருடத்தில்
காற்றேகிக் கலந்திட்டார் ;
சோதனகள் அடுக்கடுக்காய்
சோதித்த போதிலுமே
சோராமல் திகழ்ந்திட்டார் ;
இறையுணர்வு கொண்டவர்
இதயத்தில் அனைத்து மதங்களையும்
இயல்பாக மதித்திட்டார் ;
பொதுநலவாய நாடுகளை
இணைத்திடும் பாலமாய்
இருந்தவர் மறைந்திட்டார் ;
உயர்ந்த மனிதரிவர்
பெருமையினை உணர்த்துமிங்கு
அனைத்துலக அஞ்சலியே !
சர்வதேசத் தலைவர்கள்
சேர்ந்திங்கு செலுத்துகிறார்
சரித்திரப் புகழாஞ்சலி ;
நாலுபத்தோடொரேழு அகவைகள்
நானுமிங்கு வாழ்வமைத்தேன்
நலமுடனே வாழுகின்றேன் ;
அன்னை எலிசபெத் மகாராணிக்கு
அன்பார்ந்த அஞ்சலிகள்
அஞ்சலித்து வணங்குகிறேன் ;
போய்வாருங்கள் மகாராணியாரே !
நாட்டினை ஆண்டவராக அல்ல
மக்கள் மனங்களை ஆண்டவராக ;