சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தத் தமிழ் தந்திட்ட
சிந்தும் தேன் துளிகள்
விஞ்சும் வகையிலொரு
கொஞ்சும் கவிதை வரும்

அன்னை மடியினிலே நானும்
அன்று தவழ்ந்திடுகையில்
அள்ளிப் பிசைந்த என்
அன்புத் தமிழ் மண்ணின்

வாசம் இன்றும் கமழுது
நேசம் நெஞ்சில் கரை புரளுது
வீசும் தென்றலது தானும்
பேசும் மொழி தமிழென்றாடுது

தேசம் கடந்து சென்றாலும்
வேஷம் பல சுமந்து நின்றாலும்
நீசம் பல கடந்து வந்தாலும் – மொழி
நேசம் மறந்து போவேனோ ?

உருண்ட அகவைகள் பலவாக
திரண்ட அனுபவம் செடியாக
புரண்ட நினைவுகள் சுமையாக
வ்றண்ட நிலையிலும் தமிழ் தேனே 

கருவினில் சுமந்திட்ட அன்னையவள்
சுரந்திட்ட பாலிலும் தமிழோடி
நிறைந்திட்டு எண்ணத்தில் பதிவாகி
பரந்திட்டு சிந்தையில் கவியாக

இயங்கிடும் சுவாசம் இருக்கு மட்டும்
முழங்கிடும் எழுத்துக்கள் தமிழாக
இறந்திட்ட பின்னாலும் தமிழாக
இயற்கையில் தவழ்வேன் தென்றலென