வியாழன் கவிதை

சக்தி சக்திதாசன்

பாமுகத்தின் கவித் தோட்டத்திலே
பூச்சொரியும் கவிச் சந்தத்திலே
தேனுறும் இனியதோர் மாலையிலே
தெளிக்கின்றார் கவித் துளிகளையே

கவிப்பூக்கள் தொடுத்தொரு மாலை
கட்டிடும் பொன்னானதிந்த மாலையிலே
கற்கண்டின் தித்திப்பினை ஈந்திடும்
கவிச்சொந்தங்கள் மத்தியில் மயக்கமிது

அன்னைத் தமிழின் வனப்பினை
அழகாய்க் கூட்டி யாத்திடுகின்றார்
அன்புச் சொந்தங்கள் இத்தளத்தில்
அடியேனுக்கு வாய்த்ததொரு வாய்ப்பு

இனித்திடும் மொழியாம் எம்தமிழ்
இகத்தினில் இதுபோல் இன்னுமில்லை
ஈன்றதெம்நாடு இத்தகை கவிஞரை
இயற்றிடும் கவிதைகள் அற்புதமே

வாழிய அனைவரும் தமிழ்போல
வார்த்திடுங்கள் கவிதை வாழும்வரை
வான்புகழ் பெற்றிடுவாள் தமிழன்னை
வந்தனம் செய்வேன் உங்களனைவரையும்

சக்தி சக்திதாசன்