சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

மெல்லிய இரவின் வானுக்கு
துல்லிய வெளிச்சம் போட்டது போல்
சிந்திய பாலொளி வெள்ளம் தனை
தந்திட்ட அழகிய வெண்ணிலவே

எத்தனை இரவுகள் நீ கண்டாய்
எத்துணை உறவிற்கு சாட்சியானாய்
இத்தரை மாந்தரின் கனவுகளில்
இன்பமழை பல பொழிந்திட்டாய்

சுற்றிடும் இந்த இகம் தனிலே
சுதந்திரமாய் நீ வலம் வந்தாய்
முற்றிலும் மறைந்திடும் நாளொன்று – நீ
முழுதாய் ஒளிர்ந்திடும் நாளொன்று

இயற்கையின் சுழற்சியின் விதியினிலே
இப்படி நீயும் வளர்ந்து தேய்வாய்
இதயத்தில் உந்தன் எண்னம் கொண்டால்
இத்தனை இன்பம் பொங்குவது ஏனோ ?

எழுந்திடும் வினாக்கள் பலவுண்டு
எந்நெஞ்சில் நிலவுன்னை கேட்பதற்கு
எப்போது நீயும் தரையிறங்கி வருவாய்
என்னுடன் பேசி விடை பகர