சந்தம் சிந்தும் சந்திப்பு
“ மொழி”
முத்துப் பவழமே முக்கனித் தேனமுதே
சொத்தாய் மலர்ந்துமே சோதியாய் தோன்றுவாய்
நித்தமும் என்நாவில் நின்றுமே
தித்திக்க எம்தமிழைத் தந்து
மாண்புடைத் தாய்மொழியே மங்காத தேன்மொழியே
காண்கின்ற நாடெல்லாம் காதினிக்கப் பேசுகின்றார்
தோண்டச் சீறிடும் தண்ணீரைப் போன்றிடவே
வேண்டுகிறேன் விண்ணுயர வீறு
குன்றி லிருக்கின்ற கண்மணி நீயம்மா
என்றும் எமக்குமே ஏணியாய் நின்றுமே
இன்பமாய்க் கற்க இனித்திடத் தந்துமே
மன்றில் மலரும் மொழி.
கோசலா ஞானம்.