சந்தம் சிந்தும் சந்திப்பு
தமிழ்த்தாய்
குலதெய்வத் தாயாக்க் குலம்காக்க வந்தாள்
குழந்தையிலும் நாவினிக்கச் சொல்லாக வருவாள்
கும்பிடுவோம் குழலோசை வழியாகப் பாடி
குலத்தையுமே காத்திடவும் வேண்டிடுவோம் அவளை
புலம்பெயர்ந்து வந்தாலும் பைந்தமிழைப் படித்துப்
பாரிலுள்ள பாலகர்க்குப் பயிற்றுவித்தே நாமும்
பரவசமும் அடைகின்றோம் வளர்ச்சியுமே கண்டு
பிஞ்சுகளும் குஞ்சுகளும் பிழையின்றிக் கற்க
உலகாளும் தாயாக உள்ளமெலாம் நுழைவாள்
உருக்கொண்டும் மயக்கிடுவாள் ஒளிர்ந்துந்தான் நின்றே
ஒருநாளும் மறவேனே என்தாயை மனதால்
உன்னதமாய் நினைத்துந்தான் வணங்கிடுவேன் உன்னை
வலம்வருவாய் பூமியிலே வளமாக நீயும்
வந்தோரை வரவேற்கும் பண்பினையும் ஊட்டி
வாசலிலே கோலமிட்டும் வரவேற்போம் உன்னை
வந்திடுவாய் நொந்தமனம் துலங்கிடவே தாயே….