வியாழன் கவிதை

கெங்கா ஸ்டான்லி

தேடும் விழிக்குள் தேங்கிய வலி

பத்து மாதம் சுமந்து பெற்று
பாதி வழியில் தொலைத்து விட்டு.
சொந்த பந்தம் தூர விலகி
எந்தச் செயலும் எடுபடவில்லை.

கூட்டுக்குள் இருந்த குருவிக் குஞ்சுகள்
வேட்டுச் சத்தம் கேட்டு வெளியேறின.
பாட்டுப் பாடி கவலையின்றி வாழ்ந்தவர்.
நாட்டுப் பிளவால் நடைப்பிணமாய் எங்கோ!

தாய் தந்தை பிள்ளைகள் அழகிய குடும்பம்
தரங்கெட்ட அரசால் சிதறிய பிம்பம்.
தாயுடன் பிள்ளை இல்லை தந்தை இல்லை
விழிகள் தேடும் வரவை நோக்கிய ஏக்கம்.

விசாரணை என்ற பெயரில்
அள்ளிச் சென்றனர்
வேட்டையாடவா தள்ளிச்
சென்றனர்.
விசாரிக்கவும் இல்லை விடுதலையும் இல்லை
காத்திருக்கும் தாய்க்கு, மணைவிக்கு
காத்திரமான பதிலுமில்லை.

என்ன தான் கூச்சல் போட்டு கேட்டும்
நீதியும் கிடைக்கவில்லை.
நிவாரணமும் கிடைக்கவில்லை
யாரும் கருத்திலெடுக்கவுமில்லை.

கருத்தில் எடுத்திருந்தால்
தேடும் விழிக்குள் தேங்கிய வலி
கொஞ்சம் குறைந்திருக்கும்.

மனச்சுமையுடன் மாறா சோகத்துடன்,
துவளும் மனிதருக்கு விடை தர யாருமில்லை
தேடும் விழிக்குள் தேங்கிய வலி
தீரும் நாளை எதிர்பார்த்த படி.

கெங்கா ஸ்டான்லி