சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தம்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
நினைவுகள்!

கார்த்திகை புலரும் நேரமதில்
கனன்றே இதயங்கள் கண்ணீர் சிந்துதே!
காலத்தை வென்றவரின் நினைவினிலே
கணங்களும் பாரமுடன் நகர்ந்து செல்லுதே!

ஊருக்குள் நாம் உறங்கி வாழ்ந்திடவே
உறங்காமல் காத்தவரைத் தொழுதுநிற்குதே!
பேருக்காய் வாழ்கின்ற உலகிடையே
பேறாகி வாழ்ந்தவரின் பெருமைசொல்லுதே!

பிறப்பெல்லாம் இறப்புக்காய் என்றபோதும்
இறப்பின்றி விதைப்பானோர் பெயரைச்சொல்லுதே!
நீறாகிப் போகையிலும் நெஞ்சுரத்தை
நிறுத்தியவர் கனவுகளின் நினைவை மீட்டுதே!

பேறாகிப் போனீரே வரலாற்றில்
பூத்தூவி நிற்கின்றோம் தமிழரெல்லாம்
ஆறாது துடிக்கின்ற பொழுதுகளும்
ஆகுதியாய் போனோரின் மறத்தைச் சொல்லுதே!

கீத்தா பரமானந்தன்23-11-2022