சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தம்

யோசி!
சிந்தனைத் திறன் கொண்ட
சீரிய பிறவியாம் மனிதா
நிந்தனைக் குணமாய் நீயும்
மந்தையாய் வாழலாமோ?

யுத்தத்தின் சத்தத்தில்
குற்றுயிர் ஆகி
நித்தமாய்த் தொலைவது
மொத்தமாய் உயிர்கள் தானே
சற்றே நீ யோசி!

இனமத பேதங்கண்டு
இழந்தவை போதலையோ
வனவிலங்கின் கீழாய்
வரைமுறை இழக்கிறாயே
ஒருமுறை நீயும் யோசி!

பெண்ணவள் வயிற்றில் தோன்றி
பேயென மாறிப் பெண்ணைச்
சிதைக்கின்ற கணங்கள் தோறும்
கொஞ்சம் யோசி!
உண்மையில் நீ மனிதன் தானா?

கீத்தா பரமானந்தன்
23-01-2023