சந்தம் சிந்தும் சந்திப்பு!
இயற்கை!
மலையினைத் தழுவியே முகிலினம் சூழ
மயில்களும் நடமிடுங் கூடி
அலைந்திடும் தென்றலும் அவனியை அணைக்க
அருவியும் அசைந்துமே வீழும்
இலைநிறை தருக்களில் இணையுடன் சிட்டும்
இசந்துமே காதலைச் சொல்லும்
விலையிலா வின்பமாய் விழந்திடும் பசுமை
விரிந்திடும் கழனியின் செழுமை!
காரிருள் போக்கிடக் கதிரும் மதியும்
கரைந்திடும் பகலுடன் இரவும்!
பாரினை வளைத்துமே பரவிடும் கடலும்
பாதைகள் போட்டுமே செல்லும்!
வாரியே மலர்களும் வாசனை வீசிட
வண்ணமாய்ப் பூமியும் மின்னும்!
மாரியும் கோடையும் மாசிலாக் கொடையென
மகிழ்வினைச் சிந்திடும் மண்ணும்!
இத்தனை செழுமையும் இசைந்திடும் இயற்கை
இல்லையே இதனிடை வெறுமை!
சொத்தெனப் போற்றிடச் சொரிந்திடும் அனைத்தும்
சுந்தரம் ஆகிய உடமை!
வித்தகம் பேசிடும் வீறுடை மனிதரே
விநயமாய்க் காத்திடல் கடமை!
நித்தியம் போற்றியே நேசமாய் க் காப்போம்
நிகரிலாக் கொடையெனும் இயற்கை!
கீத்தா பரமானந்தன்16-07-23