சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
திருநங்கை!

படைத்தவன் செய்த
பாரிய தவறால்
இடரது கண்டே
இழுபடும் ஆயுள்!
உடையதன் உள்ளே
உலையெனும் உள்ளம்
விடையதைக் காண
விடுதலை நாடும்!

வக்கிரப் பேச்சும்
வார்த்தையின் கணையும்
உக்கிர வாளாய்
உள்ளத்தைப் பிளக்க
நித்தமும் வதைக்கும்
நீசமாம் உலகை
வித்தகம் கொண்டே
வென்றிடும் பிறவிகள்!

ஆணொடு பெண்ணாய்
ஆண்டவன் காண்போர்
ஆணினில் பெண்ணை
அலியெனப் பழிப்பார்!
வீணரின் பேச்சை
வீசியே தள்ளி
விடியலைக் காண்கின்றார்
வீறுடை திருநங்கை!

தவறேதும் செய்யாத்
தண்டனைக் கைதியாய்
இவர்களை வாட்டாது
துணையதைத் தந்தே
துளிர்த்திட வைக்க
மனிதரின் நேயமாய்
மனங்கொண்டு தொடர்ந்தே
ஏற்றிடுவோம் இவரை!

கீத்தா பரமானந்தன்02-07-23