சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

அதிகாலை அழகு!

மூடிய பனியும்
முகைவெடித்த மொட்டும்
கூடிப் பறக்கும்
கொஞ்சும் புறாக்களும்
முகிலைக் கிழித்து
முகங்காட்டும் கதிரும்
அகமெல்லாம் ஆனந்தக்
கூத்தாய் விடியல்!

பஞ்சுப் பொதிகளாய்
பள்ளிக் குழந்தைகள்
அஞ்சலற்று விரையும்
இளையோர் கூட்டம்
நெஞ்சுரம் கொண்ட
மூத்தவர் முகங்கள்
பல்வண்ணக் கதம்பமாய்
பனிவிலக்கும் காலை!

நத்தையின் ஊர்வும்
நழுவிக் கரைய
சொத்தையாய்ச் சிரிக்கும்
செவந்தி மலர்கள்
கத்தையாய்த் தோட்டத்தில்
இரைதேடும் சிட்டுக்கள்
தத்தியே விலகுது
இருளின் திரையும்!

கீத்தா பரமானந்தன்