சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாழ்க்கையெனும் ஓடம்

அலையிடையே படகாய் அனுதினமும் ஓட்டம்
நிலையற்ற கணங்களிடை நித்திய போராட்டம்
விலையற்ற ஆயுளை விதைக்கின்ற நோக்கம்
வலையிடையே மீனாகத் துடித்திடும் வாட்டம்

திசையறியாப் படகாய் தொடர்ந்திடும் பயணம்
விசையாகும் நம்பிக்கை உந்திடும் படகை
பசையாக ஒட்டுவர் பச்சோந்திகள் நடுவில்
அசையாத மனமோ பாறையாய் நிமிரும்

வஞ்சகர் துரோகம் புயலாகி விரட்டும்
அஞ்சிடில் தடுமாற்றம் அகழியாய்ப் புதைக்கும்
கெஞ்சிடும் இதயம் கரையினைத் தேடி
நெஞ்சுரம் ஒன்றே விடிவெள்ளி காணும்

கீத்தா பரமானந்தன்1