சந்தம் சிந்தும் கவிதை

கீதா பரமனந்தம்

விலகிச் செல்லும் கோடை!

உலவுது இருளின் சாடை
உதயம் காணுது வாடை
விலகிச் செல்லும் கோடை
விதைத்து நிற்குது மஞ்சளாடை !

புவியின் சுழற்சிப் பாதை
புனைந்து தந்த கீதை
நழுவும் இளமைக் கோலம்
நயக்கும் புதுமைத் தூலம்!

கதிரின் அணைப்பு விலகி
கனத்த கூதல் சூடும்
உதிரும் பசுமை கண்டே
உறவும் எட்டிப் போகும்!

பிறையில் வளரும் நிலவாய்
பிணைக்கும் நம்பிக்கை சூடி
அணைக்கும் தளிர்கள் நாளை
அதுவரை காப்பேன் தனிமை

27-10 -2021