அண்ணா
——————
பண்பினில் சிறந்து பலரைக் காத்தாய்
படிப்பினில் உயர்ந்து பலதும் கற்றாய்
பற்றுடன் இங்கே பறந்து வாராய்
கண்ணிலே மணியாய்க் காத்த தெய்வம்
கருணையும் கொண்ட கலங்கா உள்ளம்
குணமுடன் கூடிய குன்றே வாராய்
மண்ணிலே குருவாய் மகிழ்ந்து வாழ்ந்தும்
மனிதமும் கொண்ட மானிடக் குன்று
மனந்தனில் என்றும் மறவோம் வாராய்
கண்ணியம் கொண்டே கடமை செய்தாய்
காரியமும் முடித்துக் கலந்தாய் காற்றாய்க்
காலமும் மாறும் கண்ணே வாராய்
கமலா ஜெயபாலன்