சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

தாய்நாடு

நிலவளமும் நீர்வளமும் நீங்காத மாதே
நிலையாக நீகொண்ட மண்வளமும் இனிதே
நீள்குளமும் வாய்க்காலும் நெற்கதிரும் சேர்ந்து
நின்மதியைத் தருமெங்கள் நாடெங்கள் நாடே

நலங்கண்டு வாழ்ந்திடுவோம் வற்றாத சொந்தம்
நல்லனவும் கெட்டனவும் நாலும்நாம் கலந்தே
நன்றியுடன் உறவாடி நற்பணிகள் செய்தும்
நலன்மிக்க பொன்கொளிக்கும் நாடெங்கள் நாடே

புலம்பெயர்ந்து வந்ததினால் முகமிழந்து வாழும்
புரியாத மொழியுடனும் போராடி முயன்றும்
பொறுமையுடன் இருக்கின்றோம் பிள்ளைகனின் வாழ்வால்
பொக்கிசமாம் தாய்மண்ணும் பொன்போன்ற நாடே

தலம்பலவும் கொண்டநிலம் தழிழ்மன்ன ராண்ட
திருத்தலங்கள் பாட்டினிலே சிறப்புமிகு நாடு
தருமின்பம் யாவருக்கும் தாய்நாடு தானே
தரணியிலே சிறந்ததுவே நாடெங்கள் நாடே

கமலா ஜெயபாலன்