சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

தீயில் எரியும் எம் தீவு
====================
நீரில் மிதக்கும்
நிகரில்லாத் தீவே
பாரில் நீயோர்
பளிச்சிடும் அழகே
தேரில் ஏற்றித்
தூக்கிச் செல்ல
யாரிற்குத்தான் உன்னில்
ஆசை இல்லை

இராவண மன்னன்
உயர்த்தினான் உன்னை
புராணக் கதைகளில்
புகழ்ந்திடக் கண்டோம்
தாராள வளங்களில்
தங்கமாய் மிளிர்ந்தாய்
தீராத கோபத்தால்
தீயிட்டான் அனுமன்

இராவணன் செயலால்
எரிந்தது அன்று
இராஜபக்ச செயலால்
எரிகிறது இன்று
யார்கொடுத்த சாபமோ
யாசிக்கிறாய் எங்கும்
பார்முழுக்கக் கடனால்
பரிதவித்து நிற்கிறாய்

வீட்டை நேசிப்பவனை
விரட்டி அடிப்போம்
நாட்டிற்கு வேண்டும்
நல்லதோர் தலைவன்
காட்டு விலங்கும்
கடமையை மறக்காது
ஏட்டில் படித்தவன்
ஏனோ மறந்தான்

ஆட்சியில் அமர்பவன்
ஆண்டவனாய் வந்திடின்
மீட்போம் உன்னை
மீண்டும் அழகாய்
மாற்றங்கள் வேண்டிடும்
மக்களாய் எழுவோம்
தோற்றிட மாட்டோம்
தொடுவோம் உச்சம்.

ஒளவை.