சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

இயற்கை
———————
இறைவன் படைத்த
இனிய சொத்தே
குறைகள் இல்லாக்
கொடையே எமக்கு
கறைகள் தந்து
கர்வம் கொண்டோம்
மறைவாய் எம்மை
மரணம் தொடருதே

பிரபஞ்ச சக்தி
பரந்த பூமியில்
சிரமங்கள் இன்றி
சிறப்பாக வாழ்ந்திட
வரமாகக் கிடைத்த
வளமே இயற்கை
பரமனும் தந்தான்
பகுத்தறிய மறந்தோம்

இயந்திர மயத்தில்
இயற்கையை அழித்தோம்
இயல்பை மாற்றி
இன்பத்தைத் தேடினோம்
செயற்கை வழியில்
செயல்கள் புரிந்தோம்
இயல்பு வாழ்வின்
இனிமை இழந்தோம்

வேற்றுக் கிரகத்தில்
வாழ்ந்திட ஆசையில்
காற்றில் கூடக்
கலந்தோம் நச்சு
மாற்றமோ எங்கும்
மனிதன் செயலால்
ஈற்றில் நாமே
தோற்றுப் போகிறோம்.

ஔவை.