குரு பார்வை….
*******************
குருவுக்கு அடுத்தே
……கடவுளை வணங்கும்
பெருமை கொண்ட
…… பண்பினை ஊட்டி
கருவான நாள்முதல்
……கல்வியின் சிறப்பை
உருவாக்கி வளர்த்தது
……அறிவார்ந்த எம்மினம்
அறிவில் சிறந்து
…..அவனியில் உலவ
நெறிமுறை வகுத்து
…..நேர்மையான வழிகளைக்
குருகுலக் கல்வியில்
….. குறையின்றித் தந்து
பெருமையாய் வித்தைகள்
…..பெற்றிட வைத்தனர்
குருவின் ஆசி
….. கிடைக்காது போயின்
உருவான வித்தையும்
….. உதவாமல் போகும்
அருள்தரும் குருவின்
….. அன்பான பார்வையில்
வருங்காலம் எல்லாம்
….. வசந்தமே சேரும்
தரமான குருவால்
…..தரப்படும் கல்வி
உரமாக என்றும்
….. உன்னை உயர்த்தும்
சிரம்மீது இதனைத்
….. தெளிவாகக் கொண்டால்
வரலாற்றில் நிலைத்து
…..வளமாக வாழ்வாய்.
ஒளவை.