சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

பணி (வு)
========
பதவி உயரப் புகழும் பெருக
அதனால் பணிவு இயல்பாய் வரணும்
கனதி நிறைந்த கடமை வரினும்
மனதில் பணிவை மறத்தல் ஆகா

பணத்தைப் பார்த்துப் பணியும் மனிதன்
குணத்தின் வாசம் குன்றிப் போகும்
இனமும் சனமும் இகழ்ந்த போதும்
மனதில் பணிவு மலையை வெல்லும்

கல்வி பெற்றும் கர்வம் இன்றி
நல்ல மனிதர் நாளும் பணிவர்
பிள்ளை மனதில் பண்பை வளர்க்க
கள்ளம் இன்றிக் கனியும் பணிவு

தமிழர் மரபில் தலையாய்ப் பணிவு
அழியாப் புகழை அளித்த துண்டு
அன்பில் பண்பில் ஆளும் பணிவு
என்றும் இன்பம் எமக்குத் தருமே.

ஔவை.