பருவத்தே பயிர்செய்
—————————————-
பருவத்தின் பக்குவம்
பயனில் பெரியது
உருவத்தின் ஒளிர்வில்
உண்மை உணர்ந்து
அருமை தெரிந்து
அடைய முயன்றால்
கருவிற்கும் இல்லைக்
காலனின் வாசம்
நாத்து நட்டிடும்
நாளை எண்ணியே
காத்திருக்கும் காலம்
கனவுகள் பலதே
பூத்திடும் போது
பொன்னான மகிழ்வுடன்
கோத்திரம் சொல்லும்
கொண்ட செயலினை
சாலச் சிறந்த
சிந்தனை எதுவெனில்
காலமும் நேரமும்
கைகூடும் வேளையில்
ஞாலத்தில் எங்கும்
நல்லதை விதைத்தால்
ஆலம் விழுதாய்
அழியாது நிலைக்குமே
பிஞ்சிலே பழுப்பது
பயனுக்கு ஆகா
நஞ்சினை ஒத்த
நலனையே காட்டிடும்
நெஞ்சினில் இதனை
நினைவில் கொண்டால்
விஞ்சுமே இன்பம்
வையத்தில் எங்குமே
முன்னோர்கள் சொன்ன
வார்த்தைகள் என்றும்
பின்னோக்கிப் போகும்
பாதையைக் காட்டா
நன்நெறி தன்னை
நாளெல்லாம் புகட்டி
இன்றைய சிறுவரின்
இதயத்தை வெல்வோம்.
ஔவை.