சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

நாரைவிடு தூது…
————————-
கவ்விய மீனைக்
……காவியே செல்லும்
செவ்வாய் நீண்ட
……செங்கால் நாராய்
எவ்விடம் அலைந்தும்
……என்துணை கண்டு
பவ்வியம் கொண்டு
……பகிர்ந்திடு தூது

சாடை மொழியில்
……செப்பினான் காதல்
கோடை வந்திடக்
……கோடி தாண்டினான்
வாடை தீண்டிட
……வாட்டுது தேகம்
பாடை போகுமுன்
……பார்த்திடச் சொல்வாய்

நாடி நரம்புகள்
……நடைப் பிணமாக
வாடி வதங்கியே
……வாட்டுது காதல்
ஆடித் திரிந்த
……ஆனந்த நாட்களை
தேடி அலைகிறேன்
……தேகம் களைக்க

மோகத் தீயோ
……மேகத்தைத் தாண்ட
தாகக் கனலில்
……தவிக்கிறேன் நெருப்பாய்
தேகம் தீண்டத்
……தேவனும் இல்லை
வேகமாய்ச் சென்று
……வேதனையைச் சொல்வாய்.

ஔவை.