சந்தம் சிந்தும் கவிதை

-எல்லாளன்-

“நாற்சார் வீடு”

“அரச குல மாளிகை போல் நாற்சார் வீடு
அமைந்திருந்த சுண்ணாம்பு மதில்கள் நீடு
நரசிங்க முதலி வம்ச குடும்பம் ஒன்றி
நன்க திலே வாழ்ந்ததுவாம் ஒன்றாய் பொங்கி
வரவிருந்து பார்த்து செல் விருந்தும் ஓம்பி
வாழ்ந்த மனை வாசல் கூரை படலை
தாங்கி
வழி போக்கர் கால் நடைகள் நீர் ஆகாரம்
வசதிகளும் செய்த மனை மிக நீள்
காலம்.
**
படுக்கையிலே பிள்ளைகள் நாம் நால்வர் சுற்றி
பரம்பரையாய் வாழ்ந்த பாட்டி மனையை பற்றி
நெடுகலுமே சொல்வா அம்மா உறங்கு மட்டும்
நிலை குலைந்த மாளிகையின் கதையில் சொக்கி
ஒடுங்கி இன்றும் சிறிசாகி விறாந்தை
பக்கம்
உள்ள தது குஞ்சாச்சி மனையாய் இன்னும்
குடியிருந்த குடும்பங்கள் திசைக்கு ஒன்றாய்
குலைய வைத்த பட விளக்கு தீ விழுந்து.
**ஏணையிலே இருந்த பேத்தி தீயில் தோய
எடுக்கப்போன பூட்டி ஆச்சி கருகிச்சாக
தூண் சரிந்து பெறுமாத சித்தி மேனி
துண்டாகி கருவோடு கருகி சாக
தீண்டிய தீ தாண்டி மாமி பரணால் பாய
செந்தணலுள் அவ உடம்பும் வெந்து மாய
மூண்ட தீயின் சாவான எட்டுப்பேராம்
மூளை பிசகான இரண்டு சித்திமாராம்.
**
கதை சொல்லும் அம்மாவின் மூச்சு காற்றும்
கனல் கக்கும் கண்ணு இரண்டும் கண்ணீர் கொட்டும்
வதை செய்தெம் முதலி வம்சம் திக்கு ஒன்றாய்
வாடி நிற்க வைத்த தீ மேல்
வன்மம் மேவும்
சிதை மேலே தீக்கு பெரும் தீயை வைத்து
தீத்திட என் சின்ன மனம் சினத்தில் பொங்கும்
இதை எவரும் நம்பாமல் கதை என்பீரேல்
என் பேரை சொல்லி ஊரில் கேட்டுப் பாரும்
-ப.வை.ஜெயபாலன்-