ஐந்து தேர் ஊர்ந்துவரும் கந்தன் தலம் மாவை
ஆலயத்தில் அதைக்காண ஆண்டுதோறும் ஆசை
பந்தலிலே சர்க்கரை நீர் பருக சென்ற வேளை
பார்த்தே வியர்ந்தேன் ஓர்
பார்வையற்ற ஆளை
எந்தவித தடுமாற்றம் இன்றி நடமாட்டம்
ஏந்துகின்ற பேணிகளை
நிறப்புவதில் நாட்டம்
எந்தெந்த பொருள் எதிலே
என்ற மன கணிப்பு
எதிர் ஓசை நடை அளவை
கிரகிக்கும் சிறப்பு.
காது இரண்டும் இரு கண்ணை கொண்டுள்ள தாமோ
கைத்தலத்தில் கைத்தடியின்
தேவை இல்லை யாமோ
ஆதரவுக் ஆருமில்லா அப்பாவி அவனாம்
ஆனாலும் உழைத்து உண்ணும் ஆர்வமுள்ளோன் தானாம்
கூன் குருடு செவிடு என்று வரிசையிலே நின்று
கும்பிட்டு கை ஏந்தும் பலர் இருந்தார் அங்கு
பார்வையின்றி வாழ்வதற்கும்
ஊக்கம் ஒன்றே காணும்
பாடத்தை உணர்த்துதற்கு
அவன் ஒருவன் போதும்.