“பெத்த மனம் பித்து”
எண்பத்தி நான்கு இவர்க்கா
எண்ண மனம் வியக்கும்
இன்றுவரை மது மாது குடி இல்லா
ஒழுக்கம்
கண்பார்வை மிக துல்லயம்
வாசிப்பும் திறமை
கை நடுக்கம் தளர்வில்லா கம்பீரம் வழமை
நுண்ணிய நல் நினைவாற்றல்
நோய் அணுகா நிலைமை
நுடங்காது வீடு தோட்டம்
உழைப்பதுவும் வழமை
அண்ணிவழி உறவெனக்கு மனை நாடி வந்து
அழுகின்றார் வீட்டால் மகன் துரத்திவிட்டான் என்று
**ஏறாத மலை ஏறி தவம் இருந்து பெற்று
எட்டாண்டின் பின் மகனாய் பெற்ற தவ முத்து
ஆகாரம் வாடகைக்கு ஆயிரமாய் செலவில்
அன்நாளில் கொழும்பில் அவர் கிளறிக்கல் தொழிலில்
நீராலே தன் வயிற்றை பல நாட்கள் நிறப்பி
நிதம் பணத்தை மாதாந்தம் வீட்டுக்கு அனுப்பி
தார் நாராய் தான் தேய்ந்தார் வீடு காணி விற்று
தன் மகனை லண்டனுக்கு அனுப்ப விருப்பு உற்று.
**
மனைவி உயிர் நோய் பசிக்கு இரையாகி போக
மகன் அழைக்க ஸ்பொன்சரிலே லண்டன் வந்தார் வாழ
மனைவி என ஒருத்தியுடன் மகன் வாழ கண்டார்
மன துயரை மறைத்து அவளை மருமகளாய் கொண்டார்
உதவி பிள்ளை பேறுக்கென்று ஜேர்மனியால் வந்து
ஒட்டிக் கொண்டாள் மருமகள் தாய்
வீட்டில் அறை இரண்டு
அதுவரையில் அவரோடு மகன் கொண்ட பாசம்
அன்றாடம் கரைந்தாகி கொண்டதுவாம் மோசம்
**
ஆறு ஏழு வயதுவரை மல சலங்கள் கழுவி
அவர் வளர்த்த பிள்ளை இன்று மனைவி சொல்லை தழுவி
நீர் அடிக்க மறந்தாயா மலகூடத் என்று
நிலத்தில் தள்ளி கலைக்கிறதாம் அழுகின்றார் வெம்பி
நாள் எல்லாம வாணிராணி சீரியல்கள் பார்த்து
நகர்த்துகிறாள் காயை அவள் படுக்கை அறையில் கோர்த்து
ஏதேதோ பழிபாவம் நாளாந்தம் இவர் மேல்
இவரை விட மாமியாரில் பற்று பாசம் மிக மேல்
**
ஏதேன் ஒரு அரச உதவி பெற்றுதாரும் என்றார்
இனிவாழ முடியாது மகனோடு என்றார்
வேகா வெயிலில் கவுன்சில் வீடு பெற கூட்டி சென்றேன்
வேண்டும் பொலீஸ் முறைப்பாடு
மகன் அடாத்துக் என்றார்
ஆகாதினி ஏதும் என்றால் திரும்பிறன் ஊர் என்றார்
அவன் பாவம் வாழும் வயது முறைப்பாடு ஏன் என்றார்
ஏதோ ஒரு கோயில் மடம் தாய்நாட்டில் இருக்கு
என சொல்லி திரும்பும் அவர்
நடையிலும் ஒரு மிடுக்கு